Tuesday, July 14, 2015

மழைக்கம்பிகளும் மனிதக்கூட்டங்களும்

மழைக்கம்பிகளும் மனிதக்கூட்டங்களும்

பூத மேகம் பூமியை மிரட்டப் படையுட
னூர்ந்து வருவது காணீர் - அம்மிரட்டலை
எம்மிடம் சேர்க்கப் பார்க்கும் இடித்
தளபதியாரின் முழக்கம் கேளீர்!

மழையினில் ஆடிப்பாடிட வெனவே சுவாச
அழைப்பிடும் மண்வாசனை நுகரீர் – நாசி
யழைப்பினைக்  கூடயேற்க  மறுக்கும்
பூமித்தாயின் பிள்ளைகள் காணீர்!

கம்பிப்பாகப் பதமது பார்க்கும் பட்சன
மகளிர் விரைந்தே வாரீர் – மழைக்கம்பிப்
பாகப் பதமேயறியா – நம் இயற்கைப்
பாவம் களைந்திட வாரீர்!

உலகப் போர்களின் தொடக்கமறிந்த
வரலாற்றுப் பிரியரனைவரும் வாரீர் – மேக
மழையி னாதியறியு மாய்வில் புதுவரலா
றொன்றைப்  படைப்போம் வாரீர்!

காலை மாலை முழுவதுமாக சோம்பிப்
தூங்கும் மனிதர்கள் வாரீர் - வருனகம்பிப் 
படையின்  துளிகளில் தேடி யொன்றேனு
முறங்குதல் காட்டிட வாரீர்!

ரசிக்கும் பாக்கியமற்றப் பூக்களு மிங்கு
நனையத்  துடிக்கு மழகைக் காணீர் - ரசிக்கு
மாஸ்தி பெற்ற மனிதக்கூட்டம் மறைவில்
ஒண்டு மதிசயம் காணீர்!

மனித  நிலைமை  யறிந்திட இறைவனனுப்பும்
தூதுக்கூட்டம்  மழையே யென்றால்?

நம்மைத் தேடிய மழைத்துளி யெல்லாம்  மானிடரில்லா
அதிசயச்சேதி சுமந்தா நாளையவனடி சேறும்?

நாமொதுக்கிய தேவ தூதர்க ளின்று
பூமியி னடியில் தங்கிடக் கூடும் !

அவையே நாளை யாவியாய் மாறி
நாமழிந்திட்டச் சேதியைச்
சொர்கத்தில் பாடும்!

இயற்கை யுணரா இயல்பன் மனிதன்...
செயற்கை யுலகின் நிழலே மனிதன்...
சூராவளியைச் சூரையாடி  விசிறியில்
அடைத்திட முனைபவன் மனிதன்!
ரசனையற்ற யெம்மையும் படைத்து , எம்மைச்
சுற்றி இயற்கையைப் படைத்த மூலவனே!

இனி தூதர்கள் வழியே ஔடதம் மனுப்பு
புண்பட்ட  எங்கள் ரசனையை ஆற்ற !

இன்று.....
ரசனையுள்ளச் சிலரே வாரீர்
கன மழைக்காலம் காணீர் காணீர்
குடைகள் களைந்து கூத்திட வாரீர்
நமைத் தேடிச் சீண்டும் சாரல்கள் காணீர்
மழைக்கம்பிகள் பிடிக்க அனைவரும் வாரீர்
இயற்கை இடியாய் நம்மிடம் பேசுது கேளீர்!



*********************-----------------------------------------------------**********************