Wednesday, September 6, 2017

இன்று – நாளை

இன்று  –  நாளை

மனிதன் கண்டுபிடித்த
அனேக விஷயங்களுக்குச் 
சட்ட திட்டங்களுண்டு!
செயற்பாட்டு முறைகளுண்டு !

பல பொருட்கள்
செயற்பாட்டு முறையை
உடன்சுமந்தே இரட்டைப்பிறவிகள்
போல வருவதுமுண்டு !

வேதியியலின் அடித்தள
இரசாயனக் கூறுகளுக்குக்
கூட - பீறியாடிக் டேபிள்
உண்டு !

மானுட அறிவாளிகளே!
நீங்கள் கண்டெடுத்த
ஜாதிவெறிக்கு
மட்டும் கோட்பாடுகளோ
கட்டுப்பாடுகளோ
இல்லாதது ஏன் ?

சாதிசமய நம்பிக்கைகள்
தவறென்பதல்ல எங்கள்
கூட்டத்தின் வாதம்!

சாதி மதங்கள்
ரோஜாச் செடிகளைப்
போன்றவை என்பதுதான்
எங்கள் கருத்தும்!

எந்த வண்ண
ரோஜாவானாலும் ரசிக்கத்
தயார் – அதிலுள்ள முள்
குத்திக் கிழிக்காத  வரையில் !

ஒருமுறை குத்திய முள்ளுக்காக
ரோஜாச் செடியை அழிக்க
என்னும் உயர்மட்ட
பேதைகளல்ல  நாங்கள்!

நாளொரு மேனியை
குத்திக் கிழிக்கும்  முட்களும்
ஆறாத ரணங்களும்
செடிகளை அழிக்கும்படி 
எங்களை நிர்பந்தித்துவிடுமோ
எனப்  பரிதவிக்கும்
சாதாரண மனிதர்கள்!

சாதிமதங்கள் -
மனிதநேய உயிர்பாலூட்டி
தாய்மையுடன்
வளம்வரும் பொழுது
இன்முகத்துடன் 
ஜாதிக்கொடிகளைப் பிடிக்கவும்
நாங்கள் தயார்தான்!

அதுவே -
பேய்மையாய்,
பிறர்பால் நஞ்சூட்டி,
பிறப்பால் வந்த உயிரை
அழிக்கும் பொழுது,
விதியென
நொந்து மன்னிக்கவும்
மறக்கவும் இங்கெவரும்
மகாத்மாக்கள் அல்ல !

நண்பர்களே ...
உயிரெடுக்கும் உரிமையை
எமனிடமிருந்தே பறித்தாள்
ஒருத்தி!

எமனுக்கே இல்லாதுபோன
உரிமையை உங்களுக்கு
சாசனமிட்டுத் தந்தது
யார் ?

நன்மை பயக்கும்
எந்த நம்பிக்கையும்
வரவேற்ப்புக்குறியது தான்  !

நன்மை
செய்யாவிடினும்,
குறைந்தபட்சம்
தீமைச்சாரலை
அள்ளித்தெளிக்காத
நம்பிக்கை மழைகள் கூட
மகிழ்ச்சி  தான் !

மங்கள விழாக்களுக்கு
மட்டுமே  வித்திடும்
வெறிகளுக்கும்
சம்மதம்தான்!

இவையல்லாத எதையும்
ஏற்கச்சொல்வது - கள்ளிப்பால்
கலந்த விருந்தல்லவா?

ஓரிருவர் செய்யும்
தீமைகளைக் களைதல் 
எங்கள் பணியில்லை என்பீர்களா?

மன்னுரவாடும் என் விவசாயி
அப்படி நினைத்திருந்தால் 
களையில்லா பயிர்கள்
உணவாகி உங்கள்
பராக்கிரம புஜங்களை
வளர்த்திருக்க முடியாது !


இது உங்கள் விதை ...
உங்கள் ரோஜா ...
முட்கள் களைந்த
மலர் படைப்பது
உங்கள் கடமை!

உங்கள் மலரின்
பெயர்கொண்டு
முறைகளில்லா
முட்கள் குத்தும்
அறிவீனக்
கொடுமைகள்
நடக்காதிருக்க
நமக்குள் ஒரு
விதி செய்து
கொள்வோமா?

இன்று தொடங்கி
ஒரு திங்கள் முடிய,
வீதிகளெங்கும்
சாதிசமயப்
பெயரில் நடக்கும்
கொடுமைகளுக்கோர்
பட்டியலிடுவோம்!

ஒரு திங்கள் முடியும்
சமயம் - உங்கள்
சமயப் பட்டியல்கள்
அனைத்தையும்
குறிப்பேயில்லா
வெறுமை தழுவும்
காகிதங்களாக்கிக்
காட்டுங்கள்!

செய்தால் – அன்றிலிருந்து
உங்கள் சாதிகள் எதுவாகிலும்
சிரத்தில் வைத்துக்
களித்துக் காக்கிறோம்
நாங்கள் !

முடியாது போனால் ?
சாதிகள் இல்லையென
உரைத்த பாரதியின்
கனவை மெய்யாக்கும்
வழி காண்பீர்களா?

அற்ப உயிர்களே!
ஒரு முறை
ஔடதவாதிகாளாக
வாழ்ந்துதான்
பாருங்களேன்....

சமுதாய வெறிகள்
பல கண்டும் -
கூட்டு மௌனம்
காத்து காத்தே
பொறுமையின்
அண்டமாகி
விட்டோம் !

வரும் தலைமுறை உயிர்கள்
பொறுமையற்றுப்
போனால்.....

எம்மைப்போல
மேடைபோட்டு ரோஜாச்
செடியழிக்கும்  வழிபற்றி பேசாது!



அழித்துவிட்ட
செடியின்
மேல்
மேடையிட்டு
எங்கள்
இயலாமையை
எண்ணிச்
சிரிக்கும் !

இன்று  --
உங்கள் செடி
உங்கள் ரோஜா
உங்கள் முட்கள்
உங்கள் வெறி
உங்கள் விருப்பம்
முள் கிழித்த
வலி மட்டும் பிறருக்கு !

நாளை --
வலியும் உமதாகலாம் !