Monday, November 20, 2017

ஓநாய் ஓட்டைகள்

ஓநாய் ஓட்டைகள்

முகப்புத்தகத்தில் உன்
நிழலைக்கூடப் பதிவு செய்யும்
மன உறமில்லாத  நீ ...
பிறரது வாழ்க்கைப் புத்தகத்தின்
அந்தரங்கங்களைஅத்து மீறிப்
பார்க்க முனைகிறாய்!

வாழ்வியலின் அடித்தளம்
இலவசமாக வரும் 
உல்லாசமும் ;
காகித காந்தி  தரும்
வாசமும் எனத்
தேங்கிநிற்கும் நீ ....
அன்னை தெரசாவின்
சேவை குறித்த
வாதம் செய்கிறாய் !

உன் போன்ற
அற்ப மனிதர்களின்
கரகோஷ மயக்கத்தில்
அறிவீனக்  கேலிக்கூற்றை
நஞ்சாகப்  பிறர்மீது
கக்கும் நீ ....
சீர்கெட்டது சமுதாயமென்றும்
முத்தியது கலியென்றும்
அங்கலாய்த்துக் கொள்கிறாய்!

உன் சகாக்களை வீழ்த்திய
அற்ப வெற்றியில்
அவர்களை பரிகாசிக்க
எண்ணும் நீ ....
நட்பிலக்கணம் கதைக்கிறாய் !
 
உன்னவர் தவிர
அந்நியருக்கு
உதவும்
எண்ணமும்
நேரமும் இல்லாத நீ ....
தானதர்மக்
கதாகாலட்சேபம் செய்கிறாய் !

தாய்மொழி களைந்துக்கிடைத்த
சொற்ப வசதிகளுக்குக் 
தலைவணங்கும் நீ ....
மொழிப் பிரகடனம்
புரிகிறாய்!

தன்னலமே உன்னதமென
சுயநலக் களவியல்
கொள்ளும்  நீ ....
பொதுவுடமைக்
கொடி ஏற்றுகிறாய்!

இந்த நீ ....
ஆணாக இருப்பின்
இச்சமுதாயம்
பிறவிக்கறைகள்
களைந்து மோட்சக்கரை
ஏற முடியாது  !

இந்த நீ ....
பெண்ணாக இருப்பின்
இச்சமுதாயம்
பிறவிக்கறைகள்
களைந்து மோட்சக்கரை \
ஏறும்
எண்ணமே கொள்ளாது !

மொத்தத்தில் நீங்கள்
சமுதாயத்தின்
ஓநாய் ஓட்டைகள் !

இயற்கையே !
மனிதனை விட
உயர்ந்தவள் என்ற எண்ணமோ ?
இருமாப்பில் திளைக்காதே !

உன் சீரழிவின்
உச்சி தானே
ஓசோன் ஓட்டை ?

மனிதச் சீரழிவின்
தொடக்கமே எங்கள்
ஓநாய் ஓட்டைகள் தான்.

ஒப்புக்கொள் !
உன் ஓசோன் ஓட்டை எங்கள்
பலகோடி ஓநாய் ஓட்டைகளை
விடச் சிறந்ததில்லை என்று !

இத்தீர்ப்பை மாற்றியளிக்கும்
நாட்டாமை கிடைத்தால்
ஓசோன் தூதனுப்பு!

தீர்ப்பு மாறி
விடாதா
என்ற ஆசையிலும்
இத்தீர்ப்பு என்றுமே
மாறாதோ 
என்ற சந்தேகத்திலும்
காத்திருக்கிறோம்  !


-           இன்னும் ஓநாய்களாகாத சில நாங்கள் !

என் இனிய இயல்பனே

என் இனிய இயல்பனே!
கம்பீர சாமான்யனே!
மாநிற ராஜகுமாரனே!
என் சரிபாதி ஆண்மையே!
மனம் நிறைத்த மனிதனே!
என் குருதியை விழியால் தின்றவனே!
எனது கருவிழியில் வெள்ளை அடித்தவனே!

தேவைக்கதிகமாக
பேசியறியாத என்
மௌனப்
பிரபலனே!

இத்தோழிக்கொரு
ஆசை...

உன்னுடன்
ஒரு நாள்...

அதில் சில
கேள்விகள்...

உன் பிரத்தியேக
மௌன
அரட்டைக்கு
தயாராகி
வருவாயா?

கேள்வித்தாள்
இதோ
உனக்காக!

தேடிவந்து
நொடிப்பொழுதில்
தோழனானவனே
நேசக்கரம் நீட்ட
ஏனிந்த இடைவேளை?

நம் உறவென்ன
திரைப்படமா - சிறு
இடைவேளை விட்டுத்
தொடற?

உன் நினைவுகள்
என்னைத் தொடர்கிறதே
உனக்கேன் ஓரவஞ்சனை?

உன் குறுநகை என்னைத்
தொட்டுவிட்டதே
உனது வார்த்தைகளை 
தடுப்பது எது ?

உன் கூர்விழிகள் என்னைச்
சீண்டிவிட்டனவே....
விரல்களில் தீண்டாமைச்
சாயம் பூசியதேன்?
அதொரு பாவச்செயல்
என்பதறியாதவனா நீ?

சிரிக்கும் இதழ்கள்
அறிவேன்...
சிரிக்கும் இமைகளும்
தானறிவேன்...
அதெப்படி சிரித்தே
மயக்கும் புருவங்களுக்குச்
சொந்தக்காரனானாய் ?

ஆணாதிக்கமும் செய்யாமல்
பெண்களிடம்
இளித்தபடியே இழிந்தும்
போகாமல்
கம்பீரமாக வாழக்கற்றது
எப்போது?

உளம் ஆக்கிரமித்தவளை
உன் நிலப்படியேற்ற
ஏன் தயக்கம்?

உன்னை வீழ்த்திய
என்னிடம்
விருப்ப விவரம்
பகிருவதில்
என்ன குழப்பம்?

விதிர்க்காதே
ஆடவனே !

என்னவனை
உணர்ந்தவள்
நான் - உன்
நேசத்தையும்
கூடத்தான்!

 ஆம்!
நகைக்கின்ற
உன் புருவம்
தண்டோரா
போட்டுவிட்டதுன்
மனங்கவர்ந்தவள்
நானென்று!

உன்னுள்
மனப்பிரவேசம்
செய்துவிட்ட
விவரமறிவேன்!
க்ரிஹப்ரவேச
விவரம்
சொல்வாயா?

என் பொறுமையின்
வீரியம்
விளங்கவைத்த
பெருமைக்குரியவனே!

உன் காதல்
கதைக்கும்
தருணம்
வரும்வரையில்
பொறுத்திருப்பேன்!

என்
இனிய
இயல்பனே!

விடைகளை
விழியிலடக்கி
விருப்பமழை
வீசவா!

காதலறிந்து
களித்தபின்
பொருந்தும்
காமம்தேடி
சலிக்கலாம்!

மிதமிஞ்சிய
சலிப்பறிந்தால்
மீண்டும்
காதல்கொண்டு
களிக்கலாம்!


***************************------------------------------------**********************