Monday, November 20, 2017

என் இனிய இயல்பனே

என் இனிய இயல்பனே!
கம்பீர சாமான்யனே!
மாநிற ராஜகுமாரனே!
என் சரிபாதி ஆண்மையே!
மனம் நிறைத்த மனிதனே!
என் குருதியை விழியால் தின்றவனே!
எனது கருவிழியில் வெள்ளை அடித்தவனே!

தேவைக்கதிகமாக
பேசியறியாத என்
மௌனப்
பிரபலனே!

இத்தோழிக்கொரு
ஆசை...

உன்னுடன்
ஒரு நாள்...

அதில் சில
கேள்விகள்...

உன் பிரத்தியேக
மௌன
அரட்டைக்கு
தயாராகி
வருவாயா?

கேள்வித்தாள்
இதோ
உனக்காக!

தேடிவந்து
நொடிப்பொழுதில்
தோழனானவனே
நேசக்கரம் நீட்ட
ஏனிந்த இடைவேளை?

நம் உறவென்ன
திரைப்படமா - சிறு
இடைவேளை விட்டுத்
தொடற?

உன் நினைவுகள்
என்னைத் தொடர்கிறதே
உனக்கேன் ஓரவஞ்சனை?

உன் குறுநகை என்னைத்
தொட்டுவிட்டதே
உனது வார்த்தைகளை 
தடுப்பது எது ?

உன் கூர்விழிகள் என்னைச்
சீண்டிவிட்டனவே....
விரல்களில் தீண்டாமைச்
சாயம் பூசியதேன்?
அதொரு பாவச்செயல்
என்பதறியாதவனா நீ?

சிரிக்கும் இதழ்கள்
அறிவேன்...
சிரிக்கும் இமைகளும்
தானறிவேன்...
அதெப்படி சிரித்தே
மயக்கும் புருவங்களுக்குச்
சொந்தக்காரனானாய் ?

ஆணாதிக்கமும் செய்யாமல்
பெண்களிடம்
இளித்தபடியே இழிந்தும்
போகாமல்
கம்பீரமாக வாழக்கற்றது
எப்போது?

உளம் ஆக்கிரமித்தவளை
உன் நிலப்படியேற்ற
ஏன் தயக்கம்?

உன்னை வீழ்த்திய
என்னிடம்
விருப்ப விவரம்
பகிருவதில்
என்ன குழப்பம்?

விதிர்க்காதே
ஆடவனே !

என்னவனை
உணர்ந்தவள்
நான் - உன்
நேசத்தையும்
கூடத்தான்!

 ஆம்!
நகைக்கின்ற
உன் புருவம்
தண்டோரா
போட்டுவிட்டதுன்
மனங்கவர்ந்தவள்
நானென்று!

உன்னுள்
மனப்பிரவேசம்
செய்துவிட்ட
விவரமறிவேன்!
க்ரிஹப்ரவேச
விவரம்
சொல்வாயா?

என் பொறுமையின்
வீரியம்
விளங்கவைத்த
பெருமைக்குரியவனே!

உன் காதல்
கதைக்கும்
தருணம்
வரும்வரையில்
பொறுத்திருப்பேன்!

என்
இனிய
இயல்பனே!

விடைகளை
விழியிலடக்கி
விருப்பமழை
வீசவா!

காதலறிந்து
களித்தபின்
பொருந்தும்
காமம்தேடி
சலிக்கலாம்!

மிதமிஞ்சிய
சலிப்பறிந்தால்
மீண்டும்
காதல்கொண்டு
களிக்கலாம்!


***************************------------------------------------**********************

No comments:

Post a Comment