Saturday, September 20, 2014

In the memories of Mandolin Srinivas Ji - மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களின் நினைவாக....

பரிட்சயப்பட்டப் பல உறவுகளின் இழப்பு
பிரம்மாண்டப் பிரபஞ்சத்தை மறைக்கிறது!
உணர்ந்த உறவுகளை உருக்குலைக்கும் இயற்கை
நிதர்சன நம்பிக்கையைச் சிதைக்கிறது!
அன்பர்களைக் களவாடும் காலம் - மனித
வாழ்வை கண்ணீருக்கு இறையாக்குகிறது!
இதே உணர்வு, முகமறியாத உயிர்களின்
இழப்பிலும் தாண்டவமாடுகிறது !

அதிலும் பரிட்சயமற்ற சில பிரமுகர்களின் இழப்பு,
விளங்காத  ஒரு விபரீத கலக்கமளிக்கிறது!
இருதய இடி இறக்கி ஸ்தம்பிக்க வைக்கிறது!
விழிநீரில் பாய் விரித்து உறக்கம் சுமத்துகிறது!

இன்று இசையின் முக்கியப் பக்கமொன்று – பல்லாயிரம்
லிட்டர் கண்ணீர்த் துளிகளால் நனைந்து, தொடங்கிய
 சில வரிகளிலேயே – நிறைவு பெறாத ஒரு அனர்த்த
முற்றுப்புள்ளியோடு வெறுமை தழுவி விழிக்கிறது !

இசைத்தாயை வெல்ல மாண்டலின் அணைத்த
தேகத்த்தின் உயிரை – கல்லீரல் தோற்கடித்து
விட்டது!

இன்றியமையாத ராகங்கள் அளித்து - மானுட
மனங்களின் இருட்டுக்கு வெளிச்சம் காட்டிய
திருநிவாசனின் பிரிவு - இசைவானின் இருண்ட
கால நினைவுகளில் ஒன்றாகிவிட்டது!

பரிட்சயமற்ற இவரின் இழப்பு -விளங்காத 
ஒரு விபரீத கலக்கமளிக்கிறது - இருதய
இடி இறக்கி ஸ்தம்பிக்க வைக்கிறது - விழிநீரில்
பாய் விரித்து உறக்கம் சுமத்துகிறது!

********************** ----------------------------------------------------- **********************

Wednesday, September 17, 2014

Birthday wish for a 75 year youngster I know....

Another year of juvenescence - Comes
            Bumping Thy spirit of benevolence - Thy
Clairvoyance pacifies the livelihood and
            Diehard fan of thine - are we
Embracing the agony of fellowmen - Socially
            Farsighted art thou – With
God given glorious family around – Subduing
Hindrances ~ as easy as A B C
Indus Valley to Silicon Valley - Civilization
Jinxes absurdity - profoundly
Knowing uplift by sensibles – Oh Yes! we
Laud the sensible in You
My kinship epoch with Ragades is
Now quite a little – But
One vital stance -- It’s not brittle
Pioneer in spreading a smile
Quester in quenching thy IQ thirst - A
Rightly percentaged human being
Shedding every Jiffy over comrade welfare - And
That’s what makes Indhukanth Ragade
Urged by the alphabetical conclusion - These
Valuable hearts are signing off
Wishing a bundle of goodness - And
X rayed little challenges to win – In the
Years to come – Enjoy life with
Zeal, enthusiasm and Jayanthi J

Tuesday, September 9, 2014

உறைந்த உயிரோட்டம்


மனிதர்களாகிய நாம் பல பூதாகரமான நடப்புகளை மிகச்சாதாரண  ஒன்றாக பார்க்கப் பழக்கப்பட்டு விட்டோம்.இருப்பினும் சில பாதிப்புகள் மனதை விட்டு என்றுமே வெளியேறாத ரணமாகி விடுவதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட மதிப்பைப் பெற்று விடும் துயரங்களுள் கருக்கலைப்பும் ஒன்று. அதிலும் சிறிதும் எதிர்பாராமல் இயற்கையாகவே கலையும் கர்ப்பம்  , இரு உள்ளங்களை மரணத்தின் விளிம்பில் நிறுத்தி மீண்டும் வாழ்க்கைக்குள் அழைத்து வரும் கொடிய சக்தி பெற்றது. அப்படிப்பட்ட நிலையைக் கடந்த பல பெற்றோரின் எண்ண ஓட்டம்தான்  மண்வாசனை வீசும் இந்த வரிகளில். ஏழு வாரங்களில் தங்கள் முதல் கருவை இழந்த பெற்றோரின் மனக்கூவல்கள் இதோ ....

கோழி முழிச்சு முழுசா கூவல ;
வீட்டு அலறிமணி சோம்பல் முறிக்கல ;
உசிரா நீ வர சேதி தெரிஞ்சதுல ;
தூக்கங்கூட பாய் விரிச்சு தூங்க போகல.

ஆகாசம் எட்டி பார்க்குது மொத முறையா !
சூரியன்  கதிர் வாழ்த்தனுப்புது மொத முறையா !
மனசு நெறஞ்சு மௌனமானேன் மொத முறையா ! - ஒங்கப்பன்
தாயா அனச்சுகிட்டான் – இது மொத முறையா????

பெருசு ஒன்னு நல்லாத்தான் கூறு சொல்லுச்சு ...
அடியே மூணுமாசம் தாண்டுச்சுன்னா உசிரு உன்னுது ;
இல்லன்னு போச்சுதுன்னா சாமி திருடிச்சு ;
அப்படின்னே நெனச்சிக்கிட்டு முங்கி மறந்துரு .

கருவுல இருந்த ஒன்னத்தான் மறக்க முடியுமா ?
எங்க முதல் சொத்து நீ தானே மறுக்க முடியுமா ?
தடங்கூடக் கெடைக்காம இரத்த இரத்தமா – ஓடியழிஞ்ச
முந்திரியே ஒன்ன அழிக்க நெனைச்சமா?

வயக்காட்டுல வேலை செய்யற பூமிப்பயலுக
பயிரவிட்டு களைய மட்டும் வெட்டியெடுப்பாங்க – என்
உயிர்த்தோப்புல  வேல செஞ்ச எமப்பயலுக
களையின்னா பயிரே ஒன்ன வெட்டியெடுத்தாங்க???


சொந்தபந்தம் வந்தெங்க மனச தேத்துச்சு .
யப்பே! வயசான பிள்ளையவா பறிகொடுத்தீக?
எழுவார கரு கலையிறது நடப்புதானுங்க...
சின்னஞ் சிறுசு நம்முதில்லன்னு விட்டுத்தள்ளுங்க .

மனுசப்பய புத்தியறிஞ்ச ஒன் வயசு ...
எங்க மனசுக்கும் புரியுதா புரியலையே! - ஏழு
வார வயசு மத்தவனுக்குத்தான சிறுசு
ஒன்ன ஒணர்ந்த எங்களுக்குமா தெரியலையே!

சத்தமில்லாத சலனமா வந்து போனியே !
இளங்காத்துல இன்னிசையா பாட வந்தியே !
50 நாள் பனிமூட்டமா – நீ

ஒறஞ்சு போன எங்க உசிரோட்டமா !

****************-----------------------------------------------------******************

Tuesday, September 2, 2014

தரமணி - சென்னையின் அதிமுக்கிய ரூபம்.

தரமணி

சென்னைப் புத்தகத்தின் அதி முக்கிய பக்கங்களை தனதாக்கிக் கொண்டவள் இந்தத் தரமணித் தாய். இன்று  - ஆண், பெண் பேதங்களின்றி - பல கணினி வாசிகளின் முதல் புகுந்த வீடாகி விட்டவள். பணி நிமித்தமாக கணினிப் பிரவேசம் செய்தபடியே, இந்தத் தாயின் வாசத்தை உள் வாங்கியவள் நான். அங்குள்ள பன்நாட்டு நிறுவனங்கள் சாராத தரமணிக்காரர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் பெற்றவள். அன்நிறுவனங்களற்ற தரமணி எப்படியிருக்குமென யோசித்துப் பார்த்துள்ளேன்.  தன் அபார வளர்ச்சியைப் பற்றிய அந்தத் தாயின் மனநிலை , தன் சுயத்தைக் காலத்திற்க்கேற்ப்ப வளைத்துக் கொண்டு மனிதர்களை அரவணைக்கும் அவளது கருத்துக்கள் என்னவாக இருக்குமென்ற ஒரு சிறிய கற்பனை....

அவள்....
நம்மிடம் உள்ள கோளாறுகளுக்குக்
கொள்ளி வைக்க முனைகின்றாள்!

அவள்....
தரமணி....
கௌரவம் விற்றுக் கைப்பேசி
வாங்கும் மனிதனைப் பார்த்துச் சிரிக்கின்றாள்....

அவளது கொள்ளி வைப்புக் கேள்விகளும்
கொள்ளி வைப்புக் காரணங்களும்
இதோ நம் பார்வைக்கு.....

ஜனனம் தொட்டு என்னுடன் உறவாடும்
என் கூரை வீட்டுப் பிள்ளைகளின்
முதலாளுமையை - பிழைப்புத் தேடித்
தஞ்சம் புகுந்த மாடி வீட்டுப்
பிள்ளைகளுக்கு சாசனமிட்ட
சாமான்ய சானக்கியார்களே !

மேல் தட்டுப் பகட்டுகளின் நிழலில்
மறைந்துப் போகும் நிஜங்களாகப்
பிறந்தாலும்....
முகில் கிழிக்கும் கட்டிடங்களின் பிறப்பில்
மறந்துப் போகும் குடுசைகளில்
வாழ்ந்தாலும்....
பண வெள்ளத்தில் மூழ்காத
உயிர்களாக - பிரபஞ்சத்தை வெல்லும்
தரமான மனித அணிகளை அடக்கியவள் நான்!

என் மடி தவழ்ந்து, மார்பகங்கள் பிடித்து
முன்னேறி, உச்சந்தலை வெற்றித் தொட
எத்தனித்த என் தரை – மணிகளின்
அடையாளத்தை, பணக்கூழில்
அமிலமூற்றி அழிக்கப்
பார்க்கிறீர்கள்!

என்னை - என்னுள் தஞ்சம் புகுந்த
அயல் பிரதேச பகட்டாளிகளின்
மாளிகையாக்கி விட்டீர்கள்!

எந்த ஒரு ஊரும்  - தினம் வந்து போகும்
தபால்காரனுக்குச் சொந்தமாகாது!
தினம் வந்து போகும் - மடிக்கணினி
வாதிகளுக்கு  என்னைச் சொந்தமாக்கும்
உரிமையை உங்களுக்குத் தாரைவார்த்தது யார்?

பன்நாட்டு நிறுவனங்களின் அபத்தம்
சுமந்த பூமிப்பிரவேசம்தான் - என்னை 
உருவாக்கியதென்று களிக்கும்
உங்கள் ஆனவமா?

முற்றும் அறிந்த மூடர்களே!

உங்கள் நிலப்பிரவேசத்தின்
முன் நான் சுடுகாடாகத் திகழ்ந்தேன்
எனத் தெரிவித்தவர் யார்?

உம்மைப் போலவே
காந்திக் காகிதத்தின் மேல் காமம்
கொண்டக் காரியக்காரர்களா?

உங்கள் அனைவரின் வாழ்நாட்களைச்
சேர்த்தாலும் – என் பயணக் கோலத்தின்
ஒரு புள்ளியாக முடிந்துவிடும்!

பல்லாயிரம் தமிழ்க் குடிகளைக்
கண்டவள் நான்!

இன்று வந்த நீங்கள்...
என்னை வெலிநாட்டவரின்
இந்தியக் களமாக்கிவிட்டதாகப்
பறை சாற்றுகின்றீரோ?

என்னை நகரமாக்கி காட்டிவிட்டதாகப் 
பெருமை கொள்கின்றீரோ?
 உண்மையில் என்னை நரகமாகக்
காட்டியுள்ளீர்கள் மனிதர்களே!

பாரபட்சம் பார்க்கும் நரகமாக....
பணமுள்ளோரை மட்டுமே ஆதரிக்கும் நரகமாக....

அயல்நாட்டு வரைபடத்தில் உங்களைச்
சேர்த்துக்கொள்ள, என பரப்பு வெளியை
ஆக்கிரமித்த வெறியர்கள் நீங்கள்!

வெளியுரவுச் சேதிகளில் உங்கள்
அடையாளங்கள் காண,  என் உள்ளுணர்வை
சிதைக்க முயலும் உத்தமர்கள் நீங்கள்!

ஒரு வகையில் சுதந்திரத் தரமணியை
ஆக்கிரமித்த இந்திய வெள்ளையர்கள்!

 எனது மணல் பரப்பில் தரமணிவாசிகள் பலருண்டு...
நெடுநாட்களாக அவர்களைச் சுமக்கும் தாய் நான்!

இன்றும்....
என் உடலின் ஒரு பக்கம் அவர்களைச் சுமந்தபடி
மறுபக்கத்தை மட்டுமே உங்கள்
இயந்திரவாதிகளுக்குக் குத்தகை விடுத்துள்ளேன்!

 ஆத்திரமல்ல உங்கள் மீது....
ஆதங்கம்....
என் சுயத்தை மாற்ற முனையும்
மனிதர்களென்ற ஆதங்கம்!

நாம் ஒன்றுக்கூடிப் பயணிக்கலாம்....
பரஸ்பர பயன் கொள்ளலாம்....

ஒரு சில நாட்களின் பயணம்
நமை நட்பு பாராட்ட வைக்கலாம்...
மெய் நடப்பில் உற்றாராக்கி விடாது!

பிரிவெனும் ஆற்றில் தேவைத் துடுப்புபைப்
போட்டு, பரஸ்பர உயர்வு காணக்
கைக்கோர்த்துப் படகோட்டுகிறோம்....

நீங்கல் - இந்த ஆற்றுக்கு பட்டா கேட்பதில் நியாயமில்லை!

உங்கள் வளர்ச்சி - என் சுயத்தின் சாவி கேட்பதில் நீதியில்லை!

ஒன்று நினைவிருக்கட்டும்....
என் ஆன்மாவின் சுயம் என் தரமணிவாசிகள் மட்டுமே!

நீங்கள் -  என் ஆத்ம வேடந்தாங்கலை உபயோகித்துச் செல்லும்
தற்காலிகப் பட்சிகள்!
சமகால அந்நியர்கள்!

                                                தாயன்புடன்,
                                                                                                                    உம்மையும் அரவணைக்கும் நான்.
                                                                                                                                                 தரமணி.

*********************** ------------------------ ***********************

Saturday, August 30, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

என் அருமை விண்வெளிப் புயலே

அறுபத்தி இரண்டில் ஜனித்த அற்புத  அணங்கே...
கர்னல் ஈன்ற மெய்யானக் கல்பனையே!

மனிதக் களிறினமே அண்ணாந்து பார்த்த ஆகாயத்தை
அனாயாசமாக வென்று எக்காளம் இசைத்த விண்வெளிப் புயலே !

பஞ்சாபில் இலங்களைத்த பறவையே
டெக்சாஸ் முதுகளைத்த பதுமையே
கொலராடோவில் முனைவரித்த முருகே !

மாதர்தம் மூடநம்பிக்கைப் பூர்வீகங்களை புறமுதுகிட்டு
ஓடவைத்த முழுநீள முகவரியே - விண்வெளியை
வீழ்த்திய இந்திய பெண்ணினத்தின் முதல்வரியே!

பல்வகை விருதுகளை அள்ளிக்குவித்த சகோதரியே....
குவித்த விருதுகளுக்கு பெறுமதியளித்த போதனையே...
எங்கள் ஈடில்லாச் சாதனையே!

தொண்ணூற்றி ஏழாமாண்டு STS 87 இல் தொடங்கி
இரண்டாயிரத்தி மூன்றாமாண்டு STS 107 வரையில்
ஆகாயத்தை ஆண்டுதான் விட்டாயடிஅட்சியே!

அறியாத கல்பனையே!
உனை தேசியமயமாக்கி நேசிக்கிறோம்....
இழந்து விட்ட  உன் துடிப்பை உளமார சுவாசிக்கிறோம்...

எங்கள் இந்தியக் கற்பனையை பாதியிலே
பரிவின்றி அபகரித்த நடுவனே!
நீ விழுங்க மறந்த சேதிகேள்முதல்வனே...

அவள் குறுநகையை பிறைதோரும் காண்கின்றோம் இறைவனே....
இன்றும்  ஒரு பிறைகண்டே விழிநீர் தெளிக்கிறேன்  பகைவனே!


**************-----------------------------------------------------------------------------**************

Thursday, January 9, 2014

Farewell For a Couple - Family Friends!

விரும்பிகளே – தேவை யறிந்து தோள்
கொடுக்கும் ஆயுட்கால நண்பர்களே !

ஸ்ரீராமனும் தேவியுமாய்ச் சூழ்ந் தெமது
குடும்பத் தாரினாழ் மனங்களிலும் கோலோச்சிய
அன்பர்களே - அலுவலக உறவுப்பாட்டை எங்கள்
இல்லத்திலு மிசைத்த நட்பின் பிம்பங்களே !

பிரியாவிடை யளிக்கும் நேரமல்ல – இது
உங்கள் புதிய வாய்ப்புக்கு விருந்தளிக்கும்
தருணம் – பழகிய நாட்களின் சுவைகளை
அசை போடும் மனவுதிர் காலம் !

விட்டுச் செல்லவில்லை நீங்கள், சிறிது
தூரம் விலகித்தான்... புரிகிறது - வேத்துலகப்
பிரவேசமல்ல, ஓராயிரம் மைல்கள் கடந்த
நிலப்பிரவேசம் தான்.... தெரிகிறது !

நிதர்சன மறிந்த வேளையிலும் - நிரந்திர
ஆரோக்கிய வானில் பறக்கும் நட்புள்ளம்,
அநாயாச அருகாமை யின்மையை யெண்ணி
யின்று நொண்டி யடிக்கத்தான் செய்கிறது !

ஆட்ட நகரமே! ஆற்று நகராண்ட எம்
சகாக்க ளுன்னை யாள வருகின்றனர்!
அவர்தம் நட்பு பாராட்டப் பாத்திரு – ஆனந்த
அமிர்த ஊற்றில் நனைக்கக் காத்திரு !

இட மாற்றம் இடைவெளி மாற்றலாம்
நகர மாற்றம் நட்புறவு மாற்றாது – மெய்
நடப்பில் ஒரு விமான இடைத்தூரம்

மட்டுமே – நாம் நாமா­­­­­கவே தொடர !

Monday, January 6, 2014

அக்காளின் மகளே - என்னருமை மயிலே - காஷ்வி!

அரவணைக்கத்  தாயிருக்க , தந்தையன்பு
வழிநடத்த, பிஞ்சுப்பாதச் சுவடு பதிக்க
தயங்கி நிற்பதேனடீ ?- நீ நடைப்பழகக்
காத்திருக்கும் பூமியுமுன் தாயடீ....

வாசமில்லா ரோஜாப்பூக்கள் சாத்தியமல்ல -கொடியே
உறுதியான மனிதமனம் தோற்பதுமல்ல - இடராத
பிஞ்சுக் கால்கள் இயற்கையுமல்ல – தத்தித்
தாவும் உனது நாட்கள் தூரமுமல்ல!

இளஞ்சூரியனும் இடரியிருக்கக் கூடுமடி
மழலையே  - அச்சத்தால் நீயின்று இடருவதுபோல  !
ரோஜா மொட்டும் துவண்டிருக்கக் கூடுமடி
மலரே - வலுவின்றி நீயின்று துவள்வதுபோல !

அகவை நீண்ட காஷ்வியாகி ஒளிவீசத்தான்  போகிறாய்
முதிர்ந்துவிட்ட அதிகாலைச் சூரியனைப் போல!
அறிவிதழ்கள் நீண்ட ஜீவியாகி மலரத்தான் போகிறாய்
பூத்துச் சிரிக்கும் புதுச்சோலை ரோஜாக்கள் போல!

உயிர்வரையில் மயிலிறகாய் வருடிவிடும் ஆருயிரே - உன்

வாழ்வை உடனிருந்தே காத்திடுவோம் பொன்மகளே !

நம்பிக்கைக் கரம்பிடித்து முன்னேற வா முழுமதியே  - வீண்


அச்சங்கள் ஒதுக்கிவைத்து நடப்போம் வா கண்மணியே !