Monday, January 6, 2014

அக்காளின் மகளே - என்னருமை மயிலே - காஷ்வி!

அரவணைக்கத்  தாயிருக்க , தந்தையன்பு
வழிநடத்த, பிஞ்சுப்பாதச் சுவடு பதிக்க
தயங்கி நிற்பதேனடீ ?- நீ நடைப்பழகக்
காத்திருக்கும் பூமியுமுன் தாயடீ....

வாசமில்லா ரோஜாப்பூக்கள் சாத்தியமல்ல -கொடியே
உறுதியான மனிதமனம் தோற்பதுமல்ல - இடராத
பிஞ்சுக் கால்கள் இயற்கையுமல்ல – தத்தித்
தாவும் உனது நாட்கள் தூரமுமல்ல!

இளஞ்சூரியனும் இடரியிருக்கக் கூடுமடி
மழலையே  - அச்சத்தால் நீயின்று இடருவதுபோல  !
ரோஜா மொட்டும் துவண்டிருக்கக் கூடுமடி
மலரே - வலுவின்றி நீயின்று துவள்வதுபோல !

அகவை நீண்ட காஷ்வியாகி ஒளிவீசத்தான்  போகிறாய்
முதிர்ந்துவிட்ட அதிகாலைச் சூரியனைப் போல!
அறிவிதழ்கள் நீண்ட ஜீவியாகி மலரத்தான் போகிறாய்
பூத்துச் சிரிக்கும் புதுச்சோலை ரோஜாக்கள் போல!

உயிர்வரையில் மயிலிறகாய் வருடிவிடும் ஆருயிரே - உன்

வாழ்வை உடனிருந்தே காத்திடுவோம் பொன்மகளே !

நம்பிக்கைக் கரம்பிடித்து முன்னேற வா முழுமதியே  - வீண்


அச்சங்கள் ஒதுக்கிவைத்து நடப்போம் வா கண்மணியே !

No comments:

Post a Comment