பகிரப்படாத இதிகாசம்
எம்மைப் பெற்றோர் !
உன்னத வாழ்வை தமதாக்கிக்கொள்ள
தார்மீகமாக ஒன்றுகூடிய
மனிதர்கள் !
இரு பெண்களுக்கு
முகமும் முகவரியுமளித்து
எங்கள் உயிர்மரத்திர்க்கு
வித்திட்ட
அதிசய வேர்கள்!
ஆணி மாதம் – சிங்காரச் சென்னை
செய்த புண்ணியம்
என் அன்னையின் ஜனனம்!
ஐப்பசி மாதம் – கும்பகோணத்திற்கு
கிடைத்த வரம்
என் தந்தையின் பிறப்பு!
சமயம் வேறு - வாழ்வியல்
வேறு;
அகம் வேறு - புறம் வேறு ;
விருப்பம் வேறு - விருத்தம் வேறு ;
எண்ணங்கள் வேறு - சிந்தனைகள் வேறு ;
மனதார வேற்றுமைகளை ஏற்று
ஒற்றுமைகளை மையப்படுத்தி
நிறையில் குறை காணாமல்
குறையிலும் நிறைதேடி
வென்ற நவீன நக்கீரர்கள்
!
இரு(இ)தய சேர்க்கை ...
பதிவுத் திருமணம் ...
ஆலய தரிசனம் ...
நட்பின் அரவணைப்பு...
ஒருசில உற்றாரின் ஆசிகள்...
சாதாரண ஆடைகள் ...
அசாதாரண புன்னகையென
எளிமையாக தொடங்கியதொரு
பிரம்மாண்ட வாழ்க்கை !
திருமணத்தின் சான்றாக
ஒரு நிழற்படம்
கூட இல்லாத
நிதர்சன நிஜங்கள்
இவர்கள் !
ஆழ்மன உணர்வை
மின்மினி வெளிச்சமாக்கி
எங்களுக்கு
சூரிய வாழ்வளித்த
நம்பிக்கை நட்சத்திரங்கள் !
இவர்களிடையில்
காதலெனும் நேசவெளிப்பாடு
எண்பதுகளில் தொடங்கி
இந்நொடி வரையில்
ததும்பக்கண்டும்
,
அதுபற்றிக் கேட்டும்
மகிழ்ந்துள்ளோம் !
இன்றும் வியந்து
நெகிழ்கிறோம் !
உலகப்போரை ஒத்த
சொற்போர் ஒரு நிமிடம் ...
மூங்கில் கானமொத்த
ஊடல் மறு நிமிடம் ...
உலகப் புதுமைகளை
அலசும் ஆவல்
சில தருணங்களில் ...
பழங்கதைகளில் மூழ்கும் ஆர்வம்
பல தருணங்களில் ...
வானவில்
முயன்று அயர்ந்து தோற்று விடும்
இவர்களிடம் !
இவர்களது
உறவுக்குத் தான்
எத்தனை
வண்ணப் பரிமாணங்கள் !
... திருவல்லிக்கேணி – திருமயிலை – திருவளசை ...
என் பெற்றோரின்
இளங்காதல் தொடங்கி
,
திருமணம் ,
அன்பர்களுடன் கூடிச்சென்ற
இரவு நேர திரைப்படங்கள்,
பல பேரானந்தங்கள் ,
சில பணநசுங்கல்கள் ,
பிள்ளை பேரு ,
அலுவலக இன்னல்கள் ,
வாடகை வீடுகள் ,
அதன்பால் கிடைத்த குடும்ப நண்பர்கள்
என அனைத்தையும்
உள்வாங்கி செரித்துக்கொண்டு
அரவணைத்த மூன்று
திருத்தலங்கள் இவை ...
திருவல்லிக்கேணி – திருமயிலை – திருவளசை ...
அரண்மனையில் வசிக்கவில்லை
நானும் என் தமக்கையும்….
எனினும் மகாராணிகளாக
வளர்க்கப்பட்டோம்....
அமிர்தம் பருகியதில்லை ...
அன்னை சமைத்த
உணவருந்தி அமிர்தத்தை
தோற்கடித்தோம்....
விமானம் ஓட்டப்
பழகவில்லை...
தந்தை கைப்பிடித்து
கற்பித்த மிதிவண்டியில்
விமானம் துரத்தினோம்....
பஞ்சணையில் உறங்கவில்லை ...
பெற்றோரின் தேகஉஷ்ணத்தில்
அரவணைக்கப்பட்டு
கண்கள் அயர்ந்தோம்....
ஷேக்ஸ்பியர் கண்டதில்லை
நாங்கள்....
எங்கள் தந்தையின்
ஆங்கிலப் புலமையால்
பெருமை கண்டுள்ளோம் ...
புறம் பேசக்
கற்றதில்லை....
புத்தகம் படிக்கக்
கற்பித்தாள் அன்னை ....
பிறந்த நாட்களை
ஐந்துநட்சத்திரங்களில் கொண்டாடப்
பழகவில்லை...
உற்றாரற்ற
குழந்தைகளின்
விழிகளில்
நட்சத்திரங்காணப்
பழக்கப்பட்டோம் ...
பில்லியார்ட்ஸ்
விளையாடி
வளர்ந்த நினைவுகளில்லை .....
பல்லாங்குழியில்
பதுக்கிய
பொன்னான நினைவுகளை
இன்றும் அசைபோடுகிறோம் ....
இவர்களுடன்
படிப்பு முதல் பண்டிகை வரை...
பாட்டு மெட்டு முதல் சீட்டு கட்டு வரை...
கவிதை முதல் காதல் வரை ...
சோகம் முதல் சோர்வு வரை ...
புடவை முதல் புடலை வரை ...
ஓவியம் முதல் காவியம் வரை ...
கேரம்போர்டு முதல் செர்நோபில் வரை
...
TR மகாலிங்கம் முதல்
AR ரெஹ்மான் வரை ...
பகிர்ந்தும் மகிழ்ந்தும்
சுதந்திரக் கட்டுப்பாட்டை
சுவைத்தும் வாழ்ந்தோம் !
வாழ்கிறோம்!
சிப்பியில் இருந்து முத்து வரும் –
உலக இயல்பு
முத்தில் இருந்து முத்து வரும் –
எங்கள் இதிகாசச்சிறப்பு
இதுவரை பகிரப்படாத எங்கள் இதிகாசத்தை அறிந்து கொள்ளட்டும் இந்த எழுத்துக்களை உள் வாங்குவோர்
.
லக்ஷ்மி முத்துசுவாமி எனும் இரண்டு
முத்துக்கள் ஈன்ற முத்துக்கள்
என் தமக்கையும் நானும் .
இது அதிகப்படியான சுயபுராணம் என்று நினைப்போருக்கும்
இதையெண்ணி இளிப்போருக்கும் – இத்தகையப் பெற்றோருக்குப் பிறந்த பெருமையின் ஒரு புள்ளி
தமிழ்த் தெளிப்புதான் என் புத்தகத்தில் ஒட்டிக்கொண்ட இந்த முதல் பக்கங்கள் என்ற எனது
ஆழ்மனக்கருத்தை பரிசளிக்கிறேன் பெருமைமிக்க
நான் – தாரிணி
No comments:
Post a Comment