மன்னிக்காதே தாயே !
தமிழே!
தமிழ்த் தாயே !
என் பெண்ணினமே !
வள்ளுவனைச் தலைமகனாக்கிக் கொண்டவளே !
ஐம்பெரும் அணிகலன்கள் பூண்ட முதற்
பாவையே !
சுட்டும் சுடர் பத்தினியே !
எங்கள் கன்னித்தாயே !
ஆன்றோரின் மொழியதிலும்
சுந்தரக் காட்சி தருகிறாய் !
மழலையரின் மொழியினிலும்
தரிசனம் தந்து விடுகிறாய் !
தமிழறியா மாந்தர்தம் பிதற்றல்கள்
தன்னிலும் - இம்மியளவு குறையாமல்
அழகாகவே இருக்கிறாய் !
பல்லாயிரம் அகவைகள் கண்ட
இளம் மூதாட்டியே …
நேற்றுப் பிறந்த நாங்கள்
இன்று நரைத்துப் போகிறோம் …
எப்படியடி நீ இன்னும்
தாவனிக்காலத்தில்
வலம் வருகிறாய் ?
மாற்றாந்தாயாகி
ஆங்கிலக்காரி
எமை ஈர்த்தபோதிலும் ;
பொச்சரிப்பின்றி
வாழ்த்துப்பாடி
அழைத்தப் பதுமையே !
உன் முதற்வகுப்புப்
பாடங்களில்
புதுச்சாயம் பூசியே –
பல்கலைக்கழகமென
முரசுகொட்டினள் வந்த
அன்னையே !
அதிலிருந்த உன்
மெய்யின் ஆழம்
புரிந்த போதுமே ...
அறிவிலிகள்
நம்பிவிட்டோம்
சாயம் தன்னையே !
குலக்கருப்பை விட
வெளி(ர்) வெள்ளைப் பற்று
பிடித்ததும் அன்றுதான் !
சுயமுகவரி தனை
பேரம்பேசி
கதியற்றதும் அன்றுதான் !
சிற்றன்னையென யாம்
ஏற்றவள்
எம் பேராசை
குணம் புறிந்தவள் - ஒரு
தங்கக்காசு வேண்டியே
உயிர்நீப்போமென
அறிந்தவள் !
அவளிழைத்தது தவறல்ல ;
அவளைச்சாடலும் முறையல்ல ;
எமது பேராசை பித்தென்னும்
கூர்பாகம் கண்டாள் ...
கண்டதையே சாரம் தீட்டி
வெற்றியும் கொண்டாள் !
வியாபாரதர்மம் மனுதர்மத்தின்
எதிர்பதமே அல்லவா ?
சந்தையிலே மனிதநேயம்
அதர்மமே அல்லவா?
சிற்றன்னை வந்ததுவும்
வியாபார நோக்கில் அல்லவா ?
நோக்கத்தில் முறையாகவே
தர்மங்காத்தாள் அல்லவா ?
உனைப்போல்
வாரிக் கொடுக்கவில்லை
கிள்ளிக் கொடுக்கிறாள் -
உன்னிலை
தமக்கு வராதவழி
எம்மை
அளந்து வைக்கிறாள் !
இறுதியில் இன்று
தெளிந்துவிட்டோம்
தேவதையே !
உன் அரசவையின் மன்னராக
வளம் வந்த மாந்தர்கள் ....
அங்கு சேவகனின் சேவகனாய்
கூனி நிற்கும் மூடர்கள் ....
உன் பேரன்பு பெட்டகம்
நாங்கள் விரும்பித்
தொலைத்த பொக்கிஷம் !
உன் புகழ் காக்கும்
கடமையை மறந்ததாக
வருந்தினோம்...
பிறகின்று
உணர்கிறோம் !
நீ சுயம்புத் தாயல்லவா ?
அமிர்த ஊற்றில் வீற்றிருக்கும்
ஆலமர விழுதே !
உன் புகழ் காக்கும்
பணியுமுண்டோ எங்களுக்கு ...
உன்னைவிட்டு
நேற்றுதிர்ந்த இலைகளுக்கு ...
உன்னுள்ளே இடம் தந்த
ஈடில்லாத் தாயே !
பெருந்தன்மைத் தோப்பே !
அட்சயப்பாத்திரமது
உன்னிடம்
வந்து கைகள் ஏந்துமே
!
போகட்டுமது நிறையவே கொடு
பெருந்தன்மை தன்னையே !
உன் மன்னிப்பை ஏற்கும்
துணிவில்லை பதுங்குவோம் ....
என்றேனும் துணிந்து வந்தால்
உன் மடிசாய்ந்துக் கதறுவோம் ...
அன்றெம்மை மறந்தும் கூட
மன்னிக்காதே தாயே !
மன்னிப்புக் கிட்டுமென
தெரிந்த அக்கனமே ....
புதுத்தவறொன்றைத்
தொடங்குவோம் !
புதுச் சிற்றன்னை
தேடுவோம் ...
கோளோச்சி நிற்கும்
உன் புகழை வேரோடு
பிடுங்க முந்துவோம் !
இப்படிக்கு ,
உன் சுவையுணர்ந்தும் தடம் புரண்ட பிள்ளைகள்
No comments:
Post a Comment