Monday, February 13, 2017

அவதியின் அகதிகள்

முன்னோர்களே !
குகையில் வாழ்ந்த மன்னர்களே !
 நாட்டில் வாழும் மிருகங்கள் பேசுகிறோம் ...

ஆடை இல்லா மனிதன் அறை மனிதன்
எனும் கூற்றை மட்டுமே நம்பிப் பிழைக்கும்
விஞ்ஞான ஞானிகள் பேசுகிறோம் ...

ஆடையணியும் முன்னமே நாகரீக
சரித்திரம் படைத்த உங்களை மறந்த
நாகரீக மேதைகள் பேசுகிறோம் ...

புத்தகம் அறிந்திராத புத்திசாலிகளே !
புகைப்பட நகலறியாத  அசல்களே !

நாங்கள் அனுபவிக்கும் நவீனங்கள்
இல்லாத உங்கள் வாழ்க்கை முறை
எப்படி இருந்திருக்கக்கூடும் ?

யோசித்துப் பார்க்கின்றேன் !

சூரியனறியாத குளு குளு அறையில்
கடிகார முட்கள் சம்மதிக்கும்வரை உறங்கி
அலறவைத்த நாங்களே
அலறியடித்து அணைப்போம்
அலறிமணியை...

கடிகாரமுட்கள் குத்தி எழுப்பும்
அலாரக் குழந்தைகள் நாங்கள் !

விட்டு விலகாத  ரம்மிய இயற்கையில்
இதய இமைகள் சம்மதிக்கும் வரை உறங்கி
அத்வானக்காட்டில் சுற்றஞ்சூழ
சுகமான நித்திரையை
நிதமொருமுறை அணைத்தீரோ ?

சூரிய இலங்கதிர் சீண்டி எழுப்பிய
அதிர்ஷ்டக் குழந்தைகளா நீங்கள் !

 நீங்கள்
 ரசித்துப்பார்த்த  இன்பக்காலை  - எங்கள்
 இமைகளை  திறப்பதில்லை !

நீங்கள்
வருடவிட்டு பூரித்த இளங்காற்றுச்
சீண்டலை – எங்கள்
ஏ.சி அனுமதிப்பதில்லை !
அதையொட்டிய
வருத்தமும்
எமக்கில்லை  !

காந்தி மகாத்மாவின் செயற்கைச்
சிரிப்பைவிட
ரம்மிய இயற்க்கையின் விஸ்தார
விரிப்பு 
பெரிதாகப்படுவதில்லை !

காகித தாத்தாவின் சிரிப்பிற்காக
இயற்க்கை அன்னையை மறந்த - உங்கள்
உன்னதப் பேரப்பிள்ளைகள் நாங்கள் !

பழக்கவழக்கம்
மாறாதது
உங்கள் நாட்கள் ...
பழக்கம் மறப்பது
வழக்கமானது
எங்கள் நாட்கள் ...

பாசச்சோலையில்
மயங்கிய
நிலையில்
ரசித்து ரசித்து
நிலாச்சோறு
உண்டனரோ
உங்கள் பிள்ளைகள் ?

நெடுஞ்சாலையில்
நின்ற நிலையில்
துரித உணவாக 
பெயர்புரியாச்சோறு
உண்கின்றன
எங்கள் பிள்ளைகள் !

குலக்குடியினர்
ஒன்றுக்கூட  ஜனித்து
ஒட்டியே வாழ்ந்து
மறைந்தீரோ
பாட்டன்மாரே?

ஸ்கைப்பில்
ஒன்றுக்கூடி
மின்னஞ்சல்
ஜனனங்கள்
கண்டு - மறைந்து
போகிறோம் 
நாங்கள்!

அன்பின் விலையை
உங்கள்
உணர்வுகள்
நிர்ணையித்தனவோ ?

எங்கள் அன்பின்
விலையை
ஆர்ச்சீஸ்
நிர்ணயிக்கிறது !

நீங்கள்
பாடுபட்டுப்
பாதுகாத்த
ஆகாயச்சட்டையை  -
பாடுபடாமல்
அசட்டை செய்து
கோட்டை விட்டோம் !

அது
நைந்துபோன
நிலையிலின்று
ஓட்டையுடன் உள்ளதாம் !

ஓட்டை எங்கள் ஓடுகளை
அழிக்குமெனத்
தவிப்பதா ?
இல்லை எலும்புக் கூடுகளை
எரிக்குமென
விழிப்பதா ?

விக்கித்து விஞ்ஞானவாதம்
செய்கின்றோம் !
விடையறிய விக்கிபீடியா
நாடுகின்றோம்!
விடைபுரியாமல்   
வக்கத்து நிற்கின்றோம் !

வாதம் பல
செய்தே
வாழ்நாட்களைக்
கடக்கின்றோம்!

வாதங்களின்
எதிரொலியாய்
புதுமைகள் பல
கண்டுள்ளோம் !


புதுமைகளின் விவரம்
சொல்கிறேன்...
அறிந்துக்கொள்ளுங்கள்!

டென்ஷன் தெரியுமா
உங்களுக்கு ?
ஸ்ட்ரெஸ் உணர்வுதான்
புரியுமா ?

இவை பிறமொழி
மலர்கள் 
என்பதை
மறந்தும் –
எங்கள் 
தாய்மொழி
மாலைகளில்
எம்மையறியாமல்
கோர்த்தும் -
ஆண்டுகள் பல
ஓடிவிட்டன!

மழலை மாறாத
கனிகளும்
ஸ்ட்ரெஸ்
அனுபவிக்கும்
புதுமையிது!

ஒரு வயதே கண்ட
குழந்தையும்
டென்ஷனெனும்
அவதிக்குள்ளாகும்
காலமிது!

அகவை எதுவாயினும்
அகப்பட்டோம்  அவதிக்குள்ளே!

அவதிகள் பலவகை!
எங்களுக்குக் குறுகிய
நிலையில் மூவகை!

பண அவதி !
பணியவதி !
புகழவதி !

உங்கள் வம்சம்
தழைக்கப்பிறந்த
நாங்களின்று
இம்மூன்று
அவதிகளின் அகதிகள் !
கடலலையில்
வீற்றிருந்து
ரசித்திருக்கையில்,
மிதந்து வந்து
கதிகலக்கும்
பிணம்  
போல ...
உயிரலையில்
ரசித்து
வாழத் துடிக்கும்
எங்களை
வாழ்வில்
மிதக்கும் அவதிகள்
கலங்கடிக்கின்றன!

கலங்கும்
வாழ்க்கைக்
குட்டையில்
வெற்றியெனும்
மீன் பிடிக்கப்
போவது
நாங்களா ...
எங்கள்
அவதிகளா ...

மீன்
கிடைத்தால்
சொல்கிறோம்!


***************************------------------------------------**********************



No comments:

Post a Comment