Friday, March 20, 2020

கேளாய் தோழி!

அறா  ஒரு  ஊறு கேளாய்
சதா உழறும் இடர் கேளாய்
கவினனங்கன் களவாடிய
உளமொழியும் புதினம் கேளாய்!

ஆரமின்றி அரவமின்றி
வாரணம் ஆயிரம் ஏதுமின்றி
நேத்திரம் நேர்  நிறுத்திய
நேசப் பாங்கன் எனை
கிழத்தியாக்கிக் கடத்திப் போன
நிலையதை கேளாயடி சகியே!

அகமதில் கிழத்தியாம்
அண்டத்தில் கன்னியாம்
அவனகத் தோரணமாய்
எனக்கே நான்  அன்னியமாய்…
  
முரணுக்கு மூத்தவளாய்
இதழ் கடிக்கும் புதியவளாய்
யானறியா மாற்றங்கள்
உளமுனரா ஏக்கங்கள்…

குடங்குடமாய் புதுமைகள்
இடவலமாய் இன்னல்கள்
பாழ் மனதை பாங்கனிரு விழிகளுள் இழந்தேன்
எனையேனும் கேளாமல் ஒப்புதலும் தந்தேன்!

கண்ணிதழால் கதைபேசும்
காளை முகம் நாணேற்ற
களிர்முன் பூணையானேன்
தழையிட்டு விருந்துமானேன்!

கடைபிடித்தத் திணை மெல்ல
மறைவினிலே விளையாட
எனை வீழ்த்தும் விருப்பம் கேள்
அடி மனதின் விளக்கம் கேள்…
  
அகிலம் ஊழி கானும் முன்பாய்
அவனவளாய் ஓர் நாழிகை அன்பாய்
இச்சை மனம் சுடுமென்றோர் வாழி
நான் மனமெறித்த எச்சம் தான் தோழி  !

அறா  ஒரு  ஊறு கேளாய் தோழி
சதா உழறும் இடர் கேளாய் தோழி!

No comments:

Post a Comment